Related Posts with Thumbnails

கேள்விகள் <-> பதில்கள்

13 Nov 2008
07:018 PM IST


வணக்கம் ராகவன் ஐயா,

நாம் முன்னர் தொலைபேசியில் பேசிய படி இக்கேள்விகளை பதிகின்றேன். நான் இன்னும் தமிழ் 99 தட்டச்சு பழகிக்கொண்டிருக்கிறேன். அதனால் கால தாமதமாக பதிந்தாலும் இந்த கேள்விகளுக்கு முன்னுரிமை கொடுத்து பதில் தரவும்.முடிந்தால் இதை தனிப்பதிவாக இட்டால் மிக்க மகிழ்ச்சி. மேலும் இது ஒரு புது வித விளையாட்டு,அதாவது இதன் மூலம் கற்றல் மற்றும் கற்பித்தல் இரண்டுமே நிகழும். 60+ வயது வாலிபரான உங்களுக்கு இந்த விளையாட்டு மிகவும் பிடிக்கும். இதற்கான விதிமுறைகள்.

1. அனைத்து கேள்விகளுக்கும் ஒரிரு வரிகளில் பதில் கூறக்கூடாது, முடிந்த அளவு விரிவாக பதில் தரவும். கேள்விகளைப் பற்றி மற்றவரிடம் விவாதித்து பதில் தரக்கூடாது.நீங்கள் மட்டுமே படித்து பதில் தரவும். கேள்விகளை திருத்த கூடாது. இதை நான் எனது வலைப்பதிவிலும் www.gnuismail.blogspot.com -ம் பதிவேன். இது உங்க ஐடியா தான் !!!.

2. நீங்கள் வரிசையாகத்தான் பதில் தர வேண்டும், அதாவது ஒவ்வொரு கேள்வியையும் படித்த உடனே பதில் எழுதி விட்டுதான் அடுத்த கேள்வியை படித்து பதில் தர வேண்டும். மேலும் முன்னர் எழுதிய பதிலை திருத்த கூடாது.அதற்கு பதில் எழுதியதை மாற்ற கூடாது. இதற்கான நீதிபதி உங்களின் மனசாட்சி தான்.

3. தெரியாத மற்றும் புரியாத கேள்விகளை விட்டு தள்ளி பதில் அளிக்கலாம். ஆனால் பிறகு அதற்கு பதில் தர முயலக்கூடாது. வேண்டுமானால் தகவல்களை கூட்டி கழித்து திருத்திய பதில்களை வேறோரு பதிவாக இடலாம். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் சீஸன1, சீஸன்2 போல. இந்த விளையாட்டு உண்மையில் உங்களுக்கு வேறோருவர் தண்ணீரை வேகமாக வாயில் ஊற்ற, நீங்கள் அதை விட வேகமாக குடிப்பதால் அனைவருக்கும் ஏற்படும் த்ரில்லை மிஞ்சும் என நம்புகிறேன்.



இக்கேள்விகள் முன்னர் இந்திய தொழில்நுட்பவியலார்களின் மண்டலத்தில் நாங்கள் உரையாடிய போது எழுப்ப பட்டு பல விதமான பதில்களும் கிடைத்தது. ஆதலால் அப்பதில்களை இறைவன் நாடினால் வரும் சனிக்கிழமை (15 நவம்பர் 2008) மாலை 6.00 மணிக்கு நம் பதிவர்கள் அனைவரிடமும் காந்தி சிலை அருகே பகிர்ந்து கொள்கிறேன்.ஆனால் அதற்கு முன்னமே நீங்கள் பதிவு இட்டு பதில் கூறிவிடுவீர்கள் என நம்புகிறேன். முன்னர் நான் இதை கிழக்கு பதிப்பக மொட்டை மாடியில் நிகழ்த்த பத்ரியிடம் அனுமதி கேட்டேன்.ஆனால் இந்த நிமிடம் வரை மின்னஞ்சல் வரவில்லை. மேலும் உங்களின் பதிவைப் பார்த்து விட்டு உங்களுடன் பேசியபின் கிடைத்த பதிவர் சந்திப்பு தகவலுக்கேற்ப இதை மாற்றி விட்டேன். அவ்வளவுதான். இறைவன் நாடினால் வரும் சனிக்கிழமை நேரில் சந்திப்போம். நன்றி.








1. உயிர் என்றால் என்ன?

பதில்: இதற்கு பல க்ரைட்டீரியா உள்ளன. அவற்றில் முக்கியமானது தானே வளர்வது. பிணத்துக்குக் கூட நகங்கள் முடி எல்லாம் வளர்வதும் கூட அது முன்னால் உயிரோடு இருந்ததன் அடையாளம்தான் எனக் கூறிவிடலாம். இனப்பெருக்கம் செய்வது, சூழ்நிலைக்கேற்ப தன்னை மாற்றிக் கொள்வது ஆகியவற்றையும் கூறலாம். எல்லா காரணிகளும் ஒருப்போல இருக்க வேண்டும் என்னும் கட்டாயமும் இல்லை. முக்கியமாக ஒன்று கூறவேண்டும். உயிர் எதற்கு உள்ளது எதற்கு இல்லை என்பதை முக்கால்வாசி சமயங்களில் யார் வேண்டுமானாலும் கூறிவிடலாம்.

என் பதில் : ம்ம், மிக்க நன்று. உயிரியல் நியதிப்படி தாங்கள் கூறிய கருத்துகள் சரிதான். எங்களின் கருத்தானது உயிர் என்பது இறைவனின் ஆற்றல் தான். கிட்டதட்ட மின்சாரத்தை போல.
// பிணத்துக்குக் கூட நகங்கள் முடி எல்லாம் வளர்வதும் கூட அது முன்னால் உயிரோடு இருந்ததன் அடையாளம்தான் எனக் கூறிவிடலாம்.//
அப்படியென்றால் மலைகள் கூட வளர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. அதையும் உயிருள்ளவைகள் என்று கருதலாமா?




2. உயிருக்கென்று தனிப்பட்ட எடை (weight) எதுவும் உண்டா?

பதில்: எனக்கு தெரிந்து இல்லை. சொல்லப்போனால் உயிர் போன பின் கனம் அதிகமாகப் போவது போன்ற உணர்ச்சி. பிணகனம்னு கேள்விப்பட்டிருக்கீங்களா? மேலும் உயிர் என்பது பௌதிக விதிகளுக்கு உட்பட்ட வஸ்து இல்லை எனவும் நினைக்கிறேன். ஆகவே அதற்கு எடை இருக்கா இல்லையா என்பதெல்லாம் தேவையில்லாத சர்ச்சை.

என் பதில் : உண்மைதான். உயிருக்கென்று தனிப்பட்ட எடை எதையும் நவீன விஞ்ஞானத்தினால் அறுதியாக கூற இயலவில்லை. ஆனால் பிணகனம் என்பது உயிரிழந்த உடலில் நிகழும் உயிரியல் நிகழ்வுகளால் தான். வெற்று உடலானது வெளிப்புற காற்றுமண்டலத்தில் உள்ள பாக்டீரியாக்கள் மற்றும் கிருமிக்களின் தாக்கத்தினால் மாறுதலடைகிறது. அதனால் அதன் கனம் கூடுகிறது. இந்த நிகழ்வு பனிப்பிரதேசங்களில் மிக மிக மெதுவாக நிகழும். காரணம் கிருமிகள் உறைபனியில் வாழவியாலாது. எவரெஸ்ட் மலைச்சிகரத்தில் மலையேறும் முயற்சியில் அங்கேயே இறந்து போனவர்களின் உடல்கள் பல காலம் அப்படியே இருக்குமாம். ஆனால் உயிருடன் இருக்கும் சில மணித்துளிகளுக்கு முன்னும், உயிரிழந்த சில மணித்துளிகளுக்குள்ளும் உள்ள எடையை "மிகத்துல்லியமாக" அளந்து பார்த்தால் விடை கிடைக்க ஒரளவு வாய்ப்பு உண்டு. ஆனால் அது மிக மிகச்சிரமமான காரியம் !!!.

//மேலும் உயிர் என்பது பௌதிக விதிகளுக்கு உட்பட்ட வஸ்து இல்லை எனவும் நினைக்கிறேன். ஆகவே அதற்கு எடை இருக்கா இல்லையா என்பதெல்லாம் தேவையில்லாத சர்ச்சை.// ரொம்ப சரி. ஆனால் கேள்விகள் கேட்காமல் அறிவு விரிவடையாது. என்ன சரியா?





3. நமது சூரியக்குடும்பத்தில் உள்ள வியாழன் கோளினால் பூமியிலுள்ள நமக்கு என்ன பயன் ?

பதில்: அது பெயர்வதால் பல ஜோசியர்களுக்கு பிழைப்பு நடக்கிறது (குருப்பெயர்ச்சிப் பலன்). மேலும் மனிதன் என்ன இயற்கையின் முன்னுரிமைகளில் அவ்வளவு முக்கியமானவனா என்ன? அண்டவெளி தொடங்கி இன்றுவரை நடந்தவற்றை ஓராண்டு ஸ்கேலில் சுருக்கினால் உயிரென நாம் நம்பும் விஷயமே திசம்பர் 20க்கு பின்னால்தான் நடந்திருக்கும். மனிதன் உருவானது திசம்பர் முப்பத்தி ஒன்று நள்ளிரவு 12 மணிக்கு முன்னால் சில நொடிகளில். ஆக, மனிதனுக்கு வெகுகாலத்துக்கு முன்னால் உருவான வியாழணுக்கு வேறு வேலையே இல்லையா என்ன? பிரஹஸ்பதி கோபித்து கொள்ள போகிறார்.

என் பதில் : இது சரியான பதில் அல்ல. காராணம் வியாழன் கோளினால் தான் பூமியில் உள்ள உயிரினங்கள் விண்வெளியில் இருந்து வரும் பேராபத்துகளில் இருந்து தப்பி பிழைத்து இருக்கின்றது. வியாழன் கோளானது சூரியனுக்கு அடுத்த மிகப் பெரிய கோள். அதுவும் மிகப்பெரிய வாயுக்கோளம். கிட்டதட்ட மிகப்பெரிய பஞ்சை போல வாக்குவம் க்ளீனராக இந்த சூரிய மண்டலத்தில் இருந்து பணியாற்றி வருகிறது. அது விண்வெளியில் சுற்றிக்கொண்டிருக்கும் பெரும் பாறைகள் மற்றும் வால் விண்மீன்கள் சூரிய மண்டலத்தில் நுழைந்து பூமியின் மேல் மோதுவதற்க்கு முன் வியாழன் கோளானது அதன் அபரிதமான ஈர்ப்பு சக்தியினால் அதன் மீது ஈர்த்து அதனை தன் மீது மோத விட்டு அதை அழித்து பூமியையும் காத்துவருகிறது.


//மேலும் மனிதன் என்ன இயற்கையின் முன்னுரிமைகளில் அவ்வளவு முக்கியமானவனா என்ன?// என்ன இப்படி கூறிவிட்டீர்கள். இயற்கையையே படைத்த இறைவனைப்போலவே சாயலுடன் இருக்கும் மனிதனை பாதுகாக்க இயற்கையின் ஏற்பாடுகளில் ஒன்றுதான் இந்த வியாழன் கோள்.

//வெகுகாலத்துக்கு முன்னால் உருவான வியாழணுக்கு வேறு வேலையே இல்லையா என்ன? பிரஹஸ்பதி கோபித்து கொள்ள போகிறார்.// ராகவன் ஸார், வெகுகாலத்துக்கு முன்னால் பிரஹஸ்பதியால் உருவான வியாழனுக்கு இப்போதைய வேலையே இதுதான். நமக்கு பக்கத்தில் இருக்கும் நிலவுக்கும் இது போல வேறு வேலை உண்டு. இங்கே விளக்கம் உள்ளது. பிரபஞ்சத்தின் மகத்தான அறுபது புதிர்கள் ! நிலவின் துணை இல்லாமல் பூமியில் நீடிக்குமா உயிரினம் ? இறைவன் எதையும் காரணமின்றி படைக்கவில்லை.




4. குருஷேத்ரத்தில் நடந்த போரில், குந்தி தேவியின் மைந்தர்கள் பயன்படுத்திய ஆயுதங்களில் (அஸ்திரங்கள்/astras) எந்த மைந்தனின் ஆயுதம் மிகவும் ஆற்றல் வாய்ந்தது ?

பதில்: அருச்சுனன் பாசுபதாஸ்திரத்தைப் பெற்றாலும் அதை உபயோகித்ததாகத் தெரியவில்லை. ஆனால் பிரும்மாஸ்திரம் உபயோகித்தான். அதைவிட அதிக சக்தி அஸ்திரம் கிடையாது. எப்போது உபயோகித்தான்? அஸ்வத்தாமன் பாண்டவ வம்சத்தை அழிக்க பிரும்மாஸ்திரம் விட அவனுக்கு எதிர் பிரும்மாஸ்திரம் அருச்சுனனும் விட, வியாசரும் நாரதரும் இரு அஸ்திரங்களையும் தற்காலிகமாக தடுத்து நிறுத்தி அவற்றைத் திருப்பிப் பெறுமாறு அவ்விருவரிடமும் கூறினர். அருச்சுனன் உடனே அதைத் திரும்பப் பெற்றான். அசுவத்தாமனால் அது இயலவில்லை. அதன் பலனாக உத்திரையின் கருவுக்கு அபாயம் ஏற்பட்டது. கிருஷ்ணரால் கரு காப்பாற்றப்பட்டது. அஸ்வத்தாமனோ தீராப்பழியுடன் இன்னமும் உயிருடன் அலைந்து கொண்டிருக்கிறான். ஆக சக்தி வாய்ந்த அஸ்திரத்தை விட்டது அருச்சுனன். அதை திரும்பப் பெற்றதும் அவன் சாதனையே. இதுவரை யாரும் அதை செய்ததாக எனக்கு நினைவில்லை.

என் பதில் :இந்த பதிலும் தவறு. எப்படியென்றால் நீங்கள் ஆயுதங்களை அதன் உருவங்களை வைத்து அதன் சக்தியை அளவிட்டதால் வந்த குழப்பம் தான் இது. ஆனால் இவற்றை எல்லாம் விட உருவமற்ற, அதே சமயம் இவற்றை விட அதிக சக்தி வாய்ந்த ஆயுதம் தர்மரின் வாய்ச்சொல்லான "அஸ்வத்தாமா ஹதஹ,...குஞ்சரஹ" என்ற தர்மாயுதம் தான். உங்களின் இந்த "இறந்தது அஸ்வத்தாமன், என்னும் யானை" என்ற பதிவும் இதைப்பற்றி தான். இந்த ஆயுதத்தை சரியான நேரத்தில் யுதிஷ்ட்ரர் பயன்படுத்தி இருக்கவிடில் குருஷேத்திர போரின் போக்கே வேறு மாதிரியாக இருந்திருக்கும். இன்னும் சொல்லப்போனால் பகவத் கீதையே நம்மிடம் வந்து சேர்ந்து இருக்காது. காரணம் வரலாறு பெரும்பாலும் வெற்றி பெற்ற கூட்டத்தால் எழுதப்படுகிறது. மேலும் பலம் வாய்ந்த ஆயுதங்களின் தன்மைபடி இதை ஒரு முறைக்கு மேல் பயன்படுத்த முடியாது. அதன்படி பொய்யே கூறாத தர்மர் இந்த அஸ்திர பிரயோகத்திற்க்கு பிறகு அவர் எதை சொன்னாலும் அதை யாரும் முழுமையாக நம்பி இருக்கமாட்டார்கள். அவர் இதற்கு பிறகு கடுமையான குற்ற உணர்ச்சியால் பாதிக்கப்பட்டார். ஆனால் போரில் வெற்றிபெற பொய் கூறலாம். அதை தான் தர்மர் செய்தார். உண்மையில் சத்தியம் தான் பலம் வாய்ந்த ஆயுதம். ஆதலால் தான் இந்தியாவின் National motto ஆக முண்டக உபனிஷத்திலிருந்து எடுக்கப்பட்ட "சத்தியமேவ ஜயதே" என்ற வாசகம் உபயோகப்படுத்தப்படுகிறது.

மீதி விவரங்களை தட்டச்சு செய்து கொண்டிருக்கின்றேன். இறைவன் உதவியால் கூடிய விரைவில் பதிகின்றேன்.


5. தற்கால "கலியுக பெண்ணொருத்தி" தற்பொழுது உள்ள சமூக நிலையில் "துவாபர யுக திரெளபதியைப்" போல் பஞ்ச பாண்டவர்களுடன் வாழ இயலுமா ?




6. குருஷேத்ரப்போருக்கு பின் கெளரவர்களின் படையில் உயிர் பிழைத்தவர்கள் யார் யார்?




7. யூத குலத்தில் பிறந்த இயேசு (ஈஸா அலை) அவர்கள் யூத குருமார்களை எதற்க்காக எதிர்த்தார்கள் எனத் தெரியுமா ?




8. இயேசு (ஈஸா அலை)அவர்களின் தற்போதைய நிலை என்னவென்று தெரியுமா ?




9. யுக முடிவு அல்லது ஊழிப்பிரளயத்திற்க்கு முன்னால் இயேசு (ஈஸா அலை) அவர்கள் பூமிக்கு இரண்டாம் வருகை புரிவதை எந்த அளவு நம்புகிறீர்கள்?




10. முஹம்மது (ஸல்) அவர்களின் பிறப்பிற்க்கு முன் அரேபிய தேச மக்கள் எதை முதன்மை கடவுளாக வணங்கி கொண்டிருந்தனர் ?




11. தற்போது அரபுதேசத்திலுள்ள அரபுக்களால் கடைப்பிடிக்கப்படும் யூதர்களின் மீதான இனவெறியானது முஹம்மது (ஸல்) அவர்களின் நடைமுறையா?




12. முஹம்மது (ஸல்) அவர்கள் மரணித்த போது அவர்கள் உணவுக்காகக் கடன் வாங்கிய கோதுமைக்காக அவர்களின் இரும்புக் கவசம் யாரிடம் அடமானம் வைக்கப்பட்டிருந்தது ?



13. இயற்கை பேரழிவுகளின் போது ஒற்றுமையடையும் மனித இனம் (உ.ம் - 2004 சுனாமி) சில மாதங்களுக்கு பிறகு மறுபடியும் தன் இன இரத்தத்தையே ஏன் மண்ணில் சிந்த வைக்கின்றது?




14. தற்போது ஏற்ப்பட்ட பொருளாதார மந்தநிலைக்கு காரணம் முதலாளித்துவமா? அல்லது அதை நிர்வாகித்த மனிதர்களா?




15. நீங்கள் கணினியை முதலில் எங்கே பார்த்தீர்கள் ? கணினியை எப்போது இயக்கினீர்கள் ? சொந்தமாக கணினியை எப்போது வாங்கினீர்கள் ?




16. உங்களின் தமிழ் தட்டச்சு முறை என்ன? ஏன் அதை உபயோகப்படுத்துகிறீர்கள் ?




17. பிராமணர்கள் (or) பார்ப்பான், கிறிஸ்துவர்கள் (or) மிஷநரி , முஸ்லிம்கள் (or) துலுக்கன் ஆகியோர்க்கிடையான ஒற்றுமை, வேற்றுமை என்ன?




18. நீங்கள் ஒரு பிராமணரா (or) பார்ப்பானா?




கேள்விகள் அவ்வளவுதான். தங்களின் பதிலை எதிர்பார்க்கும்,


பொறுப்பு மற்றும் அன்புள்ள,

முஹம்மது இஸ்மாயீல் . ஹ


பின்குறிப்பு ; மற்றவர்களும் பதில் தரலாம். ஆனால்
வரும் சனிக்கிழமை (15 நவம்பர் 2008) மாலை 5.30 மணிக்கு தான் வெளியிடப்படும்.


முகம்மது இஸ்மாயில் அவர்களது கேள்விகளுக்கு எனது பதில்கள்

 

0 பின்னூட்டங்கள்:

வருகை புரிந்த பொறுமையாளர்களின் வார்த்தைகள்